Mahaboob Batcha Sir (SOCO Trust) -- மகபூப்பாட்சா அவர்களுக்கு -- கண்ணீர்அஞ்சலி -- - By R. Karunanidhi, Advocate
2003-ஆம் ஆண்டிலிருந்து, எனக்கு நீங்கள் செய்த எண்ணிலடங்கா உதவிகளை, ஊக்கம் அளித்த வார்த்தைகளை இனி யாரிடம் பெறுவேன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு ஏற்பட்ட இன்பங்களையும், துன்பங்களையும் சட்டக்கல்லூரி காலம் முதல் உங்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவ்வளவு பிரியமுடன் கேட்கும் பாட்ஷா சார் இன்று இல்லை எனும் யதார்த்த சூழலை ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. மரத்தின் கிளையில் இருக்கும் இலை என்றாவது ஒருநாள் சருகாய் மாறி கீழே விழும் என்ற இயற்கையின் நீதியை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உங்களின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
புத்தகத்தை எப்போதுமே "புஸ்தகம்" என உச்சரித்து அதன் மேல் எனக்கு ஒரு உயிரோட்டமான உறவை ஏற்படுத்திய "நிஜங்கள்" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எங்கே என்று கேட்டுக் கொண்டே என் மனம் நிற்கிறது. கொத்தடிமை உரிமை தொடர்பாக வழக்குகளை கையலும் போதெல்லாம் எத்தனை முறை தொந்தரவு செய்து கேட்டாலும், எனக்கு ஆலோசனை சொல்லும் உங்களை நான் எங்கே போய் தேடுவேன் என்று தெரியவில்லை. என்னை எப்போதுமே எழுதுவதற்கும், மேடையில் பேசுவதற்கும் ஊக்குவிக்கும் அந்த உற்சாக வார்த்தைகள் சத்தம் இன்றி இன்று உறங்கிப் போய்விட்டன. கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு கோடை முகாம் நடத்தும் சோக்கோ பாட்ஷா சார் இன்று இல்லை என்ற துன்பச் செய்தி துயரத்தை அதிகப்படுத்துகிறது. வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய அற்புதமே ! இனி நாங்கள் உங்கள் இப்புவியில் எப்போது நாங்கள் உங்கள் முகம் பார்ப்போம் ! ஊற்றெடுக்கும் உங்களின் நினைவுகள் எங்கள் உள்ளத்தை வருத்தமடைய செய்கின்றன.
வானவில்லின் நிறங்களைப் போன்று நீங்கள் எழுதிய எழுத்துக்கள் தவழும் "நீதி வானில் ஒரு செந்தாரகை" புத்தகத்தை பல நூறு முறை படித்திருப்பேன். இச்சமூகத்திற்காக பணியாற்றிய நீதிபதிகளை உங்களின் எழுத்துக்கள் மூலம் தான் தெரிந்து கொண்டோம். நீதிநாயகம் பி.என்.பகவதி பற்றி நான் எழுதிய கட்டுரையை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கி பல கட்டுரைகளை எழுத உந்து கோளாக இருந்தவர் நீங்கள்...!!!
தமிழக-கர்நாடக எல்லையோர கிராமங்களில் கூட்டு அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் செய்தும், மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அரசு சாரா அமைப்புகள் மூலம் முயற்சிகள் செய்தும், நீதிபதி சதாசிவா ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மூலமாக நீதிநாயகம் சிவராஜ் பாட்டில் இருந்தபோது, இழப்பீடு கிடைக்க போராடிய மனித உரிமை போராளியான உங்களின் பணிகளை இச்சமூகம் எப்போதும் நினைவுக் கூறும்.
சட்டம் படித்துவிட்டு ஒரு சராசரி வழக்கறிஞராக இல்லாமல், பல எளிய மனிதர்களுக்காக, கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதற்காக, அரசின் ஏதேச்சதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த உங்களது பணிகள் என்றென்றும் நினைவில் நிற்கும். தூக்கு கயிற்றின் முன்னாள் நின்று கொண்டிருந்த எத்தனையோ சிறைவாசிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய போராடிய உங்களின் தியாகம் எப்போதுமே எங்கள் நினைவில் நிற்கும் ! வாழ்வின் இறுதி வரை இல்லாத மனிதர்களுக்கு சட்ட உதவி வழங்கிய உங்களை இச்சமூகம் எப்போதும் நினைத்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் எளிமை, எளியோருக்கு செய்த எண்ணற்ற உதவிகள் எல்லாம் நீங்காமல் எங்கள் நினைவில் நிற்கும்.
சோக்கோ அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர், தேசிய மனித உரிமை ஆணைய அரசு சாரா அமைப்புகளின் தேசிய மையக்குழு உறுப்பினர், முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர் நாராயணன் அவர்களிடமிருந்து தேசிய குடிமகன் விருது பெற்றவர், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கொத்தடிமை குழந்தைகளை விடுதலை செய்வதில் முக்கிய பங்காற்றியவர், பல வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றத்தால் ஆணையராக நியமிக்கப்பட்டவர். இத்தனை பண்முக ஆளுமையை இழந்து விட்டோம். எனது உயிரோட்டமான உறவு இன்று நினைவுகளாக மாறிப்போனபோது அழுகை வருகிறது. சமூகத்திற்கான உங்களின் அளப்பரிய பங்களிப்பை எண்ணி பெருமைப்படுகிறோம். உங்களின் சமூக பணிகள், தமிழ் மொழியின் எழுத்தாற்றல் எல்லாமே எங்களுக்கு உற்சாகம் ஊட்டியவை. இந்திய உச்சநீதி மன்ற மற்றும் உயர்நீதிமன்ற வரலாற்றில் மனித உரிமைகளை பாதுகாக்க நீங்கள் பதிவு செய்த பொது நலவழக்குகள் என்றென்றும் எங்களுக்கு உற்சாகம் அளித்து செயல்பட வைக்கும்.
ஒரு சராசரி மனிதராக இல்லாமல் பல பொது நலன் சார்ந்து இயங்கிய உங்களின் சமூகப்பங்களிப்பை நாங்கள் நினைவு கூறுகிறோம். மானுட சேவைக்காக மருத்துவம் மாற வேண்டும் என்ற உங்களின் கனவுகள், கைவிடப்பட்ட முதியவர்களை பராமரிக்க நீங்கள் உருவாக்கிய இல்லம், இலவச சட்ட சேவை என உங்களின் சமூக செய்ல்பாடுகளை நாங்கள் கண்டு பிரமித்து போனோம். 1982-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சோக்கோ அறக்கட்டளையின் மூலமாக பல லட்சக்கணக்கான சாமானிய மனிதர்களுக்கு சட்ட உதவிகளை கொண்டு சேர்த்த உங்களின் பணிகளை இம்மானுடம் மறக்காது. உங்களின் கையில் எழுதிய கடிதங்களை பொதுநல வழக்காக மாற்றிய அந்த உச்சநீதிமன்றம் கூட அதுவரை அறிந்திருக்க வில்லை பழங்குடி மக்களின் கொத்தடிமை முறைகளையும் அந்த மக்களின் வேதனைகளையும் !
இச்சமூகத்தில் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உருவாகக் காரணமாக அமைந்தவர் நீங்கள்...!!! எவ்வளவோ மனித உரிமை களப்பணியாளர்களை உருவாக்கியவர் நீங்கள்...!!! அகல விழிகளில் ஆலமரமென சோகமாய் நிற்கிறோம். பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர் ஐயாவே.!! மதுரையின் அடையாளமான யானை மலையை பொது நலன் வழக்கு தொடர்ந்து பாதுகாத்துத்தந்த உங்களை மதுரை என்றென்றும் மறக்காமல் இருக்கும்!
கண்ணீருடன்,
R. கருணாநிதி
Comments
Post a Comment