பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜிஎஸ்டி விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு
பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜிஎஸ்டி விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு
https://www.hindutamil.in/news/tamilnadu/1036360-road-tax-gst-exemption-for-visually-impaired-woman-s-car-high-court-orders.html
நூறு சதவீத பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்தவர் காருணியா சீலாவதி. இவர் நூறு சதவீத பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண். ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக கார் வாங்க முடிவு செய்து, அதற்கு சாலை வரி மற்றும் ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பினார்.
அந்த மனு, ‘உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே வரி விலக்கு சலுகை வழங்கப்படும். நூறு சதவீத பார்வையற்றவர்களுக்கு சலுகை வழங்கப்படாது’ என்று கூறி நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், ‘உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்குவது போல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் கார் வாங்கும் போது சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு சலுகை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மனுதாரருக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: "மனுதாரர் நூறு சதவீத பார்வையற்ற மாற்றுத்திறனாளி. அவர் பயணம் செய்ய மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியது இருப்பதால் சொந்தமாக கார் வாங்க நினைத்துள்ளார். மனுதாரர் ஒரு பார்வையற்ற பெண்ணாக தற்போதைய சூழலில் ஆட்டோ, காரில் பயணம் செய்வது அவரைப் பொறுத்தவரை சரியாக இருக்காது. இதனால் கார் வாங்க முடிவு செய்து, அதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வரி விலக்கு சலுகை கோரி விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கார் வாங்குவதற்கு ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண விலக்கு வழங்க விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மாற்று்த்திறனாளிகள் ஆணையர் பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரை அடிப்படையில் மனுதாரர் வரி விலக்கு சலுகை பெற தகுதியானவர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் உள்ளனர். அரசு துறைகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் பணியிடங்களுக்கு செல்வது பெரிய சவாலாக உள்ளது. இதனால் மனுதாரரிடம் உறுதிமொழி கடிதம் வாங்கிக்கொண்டு 4 வாரத்தில் மோட்டார் வாகன வரி மற்றும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment